மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே உள்ள காட்டூர்-தத்தைமஞ்சி கிராமங்களில் உள்ள ஏரிகளை ஒன்றாக இணைத்து ரூ.62 கோடியில் புதிய நீர்த்தேக்கம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த புதிய நீர்த்தேக்கத்திற்கு ஆரணி ஆற்றில் இருந்து வெள்ள நீர் கொண்டு வருவதற்காக லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து 90 லட்ச ரூபாய் மதிப்பில் 5.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே பொதுப்பணித்துறை நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த கால்வாய் உள்ளதால், சர்வே பணி செய்யாமல் கால்வாயின் இருபுறங்களிலும் கரைகள் அமைத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரெட்டிப்பாளையம் முதல் வேலூர் கிராமத்திற்கு வரும் சாலையானது இந்த கால்வாய் மீது வருகிறது. இந்த இடத்தில் பாலம் அமைத்து கால்வாய் பணி நடைபெறுவதால், எரியபிள்ளைகுப்பம், அத்தமனஞ்சேரி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என நீர்வளத்துறை அதிகாரிகளும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு சென்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்த நிர்வளத்துறை ஆரணியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஜெயக்குமாரி, உதவி செயற்பொறியாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கால்வாய் மீது பாலம் கட்டவும், 4 இடங்களில் மதகுகள் அமைக்கவும் நடந்து வரும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.