புளியங்குடி,
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஏற்கனவே 6 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புளியங்குடி நகர் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புளியங்குடி அகஸ்தியர் கோவில் தெருவை சேர்ந்த ஒருவருக்கும், காயிதே மில்லத் தெருவை சேர்ந்த இன்னொருவருக்கும், முத்து தெருவை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அவர்களும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் புளியங்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து நகரசபை சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், வருவாய் துறையினர், போலீசார் அந்த தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து தெருக்களையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள், முத்து தெரு, காயிதே மில்லத் தெரு, அகஸ்தியர் கோவில் தெருவை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் தெருக்கள் முற்றிலுமாக தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. அந்த தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த தெருக்களில் உள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெருக்களில் வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க நகரசபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு அதிகாரியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனருமான எம்.கருணாகரன், மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் புளியங்குடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைககள் குறித்து நேற்று நேரில் வந்து அதிரடியாக ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
ஹாட்ஸ்பாட் ஆக அறிவிப்பு
பின்னர் மண்டல சிறப்பு அதிகாரி எம்.கருணாகரன் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, நன்னகரம் ஆகிய பகுதிகள் ஹாட்ஸ்பாட் ஆக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுவரை இந்த மாவட்டத்தில் 14 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு நெல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மூச்சுத்திணறல் இருந்த 6 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 70 ஆயிரத்து 423 வீடுகளில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 100 பேருக்கு சர்வே செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2,317 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களில் 2,034 பேருக்கு 28 நாட்கள் முடிந்துவிட்டது. இவர்களுக்கு நோய் தொற்று இல்லை. மேலும் 283 தனிமையில் உள்ளனர். அவர்களுக்கும் விரைவில் இந்த காலம் முடிவடைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், நகரசபை ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, தூய்மை இந்தியா பணிகள் மேற்பார்வையாளர் விஜயராணி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.