செங்கல்பட்டு,
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.
இதனால் நோயாளிகளின் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. தற்போது பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் பல மணிநேரம் ஆம்புலன்சுகளில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை தனியார் நிறுவனங்கள் வழங்கி உள்ளன. இந்த கருவி இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய காற்றை உள்வாங்கி அதில் இருந்து ஆக்சிஜனை பிரித்து எடுத்து நோயாளிகளுக்கு வழங்குகிறது.
இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நேரம் குறைவதுடன் பெரும்பாலான நோயாளிகளின் உயிர்கள் காக்கப்படுகிறது. இந்த கருவியை வாங்குவதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது.