உடுமலை,
உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது. முகாமை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக சுமார் 13 ஆயிரத்து 500 டோஸ் மருந்துகள் வந்துள்ளது. அவை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு, அங்கிருந்து தடுப்பூசி போடும் மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்படுகிறது. திருப்பூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை, பெருமாநல்லூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி போடும் மருத்துவமனையில் பணிபுரிய 5 நிலை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். முதல் அறையில் தனிமனித இடைவெளியில் காத்திருத்தல், 2-வது அறையில் தடுப்பூசி போடுபவர்களின் அடையாள விவரங்களை சரிபார்த்தல், 3-வது அறையில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர் அதற்கு தகுதியானவரா என சரிபார்த்தல், 4-வது அறையில் தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் 5-வது அறையில் தடுப்பூசிக்கு பிந்தைய கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 16 ஆயிரத்து 640 சுகாதார பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான விபரங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
உடுமலை அரசு மருத்துவ மனையை மாவட்ட மருத்துவமனைக்கு நிகரான மருத்துவமனையாக தரம் உயர்த்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.8 கோடி நிதிஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்.
இந்த மருத்துவமனையை சிறந்த மருத்துவமனையாக உருவாக்குவதற்கு மேலும் ரூ.98 லட்சம் நிதி ஒதுக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவ மனை கட்டிடம் விரைவில் மக்களுக்கான சேவைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொது சுகாதாரம்) டாக்டர் பாக்கியலட்சுமி, துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீசன், அ.தி.மு.க.நகர செயலாளர் ஏ.ஹக்கீம், மாவட்ட ஆவின் தலைவர் வக்கீல் மனோகரன், தேஜஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் எஸ்.எம்.நாகராஜ், உடுமலை கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குநர்கள் வார்டன் பொன்னுசாமி, மளிகை செல்வராஜ், நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கே.டி.ரமேஷ், பெரியகோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் பி.பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.