மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் கொரோனா பாதித்தவர் பரிதாப சாவு - சுகாதாரத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

ராய்ச்சூரில், சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பரிதாபமாக இறந்தார். இதனால் சுகாதாரத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

தினத்தந்தி

ராய்ச்சூர்,

ராய்ச்சூர் டவுனை சேர்ந்த 48 வயது நபர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறியும் இருந்தது. இதற்கிடையே அந்த நபருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த நபரின் குடும்பத்தினர், சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் அனுப்பி வைப்பதாக சுகாதாரத்துறையினர் கூறினர். ஆனால் பல மணி நேரம் ஆனபோதிலும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

இந்த நிலையில் வெகுநேரம் கழித்து தாமதமாக ஆம்புலன்ஸ் அந்த நபரின் வீட்டிற்கு வந்தது. ஆனால் அந்த நபர் முதல் மாடியில் வசித்து வருவதால், அவரை மாடிக்கு சென்று அழைத்து வர ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர், பாதிக்கப்பட்ட நபரை மாடியில் இருந்து அழைத்து வர மருத்துவ ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த நபரை மாடியில் இருந்து அழைத்து வந்த மருத்துவ ஊழியர் ஆம்புலன்சில் கொண்டு சென்று ராய்ச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அந்த நபருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் அந்த நபர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த நபர் இறந்து விட்டார். இதையடுத்து அந்த நபரின் உடலை சுகாதாரத்துறையினர் பெற்று கொண்டு அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை, ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் அலட்சியத்தால் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இறந்து விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். சரியான நேரத்திற்கு சுகாதாரத்துறையினர் ஆம்புலன்சை அனுப்பி வைத்து இருந்தால் அந்த நபரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் கொரோனாவால் இறந்த நபர் வசித்த பகுதி முழுவதும் கிருமிநாசினி திரவம் தெளித்து சுகாதாரத்துறையினர் சுத்தப்படுத்தினர். மேலும் அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்