முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் முதுகுளத்தூர் தாலுகா மேலச்சிறுபோது கூட்டுறவு சங்க தலைவரும் விவசாயியுமான முகமது ரபீக் மற்றும் விவசாயிகள் இணைந்து மற்ற விவசாயிகளுக்கு உதவும் வகையில் முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது மற்றும் கோவண்டான் ஆகிய கிராமங்களில் அமைத்துள்ள 10 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீரை ஒரு இடத்தில் தேக்கி தானமாக வழங்க ஏற்பாடு செய்தார்.
இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் பருத்தி பயிரிட்டனர். விவசாயிகள் இந்த தண்ணீரை ஒரு நாளுக்கு ஒரு குடும்பம் வீதம் பருத்திக்கு பாய்ச்சினர். இதனால் தற்போது பருத்தியில் அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:- மழை பொய்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் கூட்டுறவு சங்க தலைவர் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்த பகுதியில் பருத்தி சாகுபடி செழித்துள்ளது. இதன் மூலம் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். பருத்தி ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாலை வசதி
இதுதவிர கிராம மக்களின் தேவையான தண்ணீர், அடிப்படை வசதி, மேலச்சிறுபோது கிராமத்தில் தெருக்களில் சாலை , அரசு சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் , போதிய குடிநீர் கிடைக்கவும், விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கவும் மாவட்ட கலெக்டரிடம் கூட்டுறவு சங்க தலைவர், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.