பட்டிவீரன்பட்டி:
துக்க நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அண்ணாநகரை சேர்ந்தவர் மீனாச்சாமி (வயது 57). விவசாயி. இவரது மனைவி ஜெயக்கொடி (52). இன்று காலை பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்தில் உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மீனாச்சாமியும், ஜெயக்கொடியும் புறப்பட்டனர்.
இதற்காக கணவன்-மனைவி இருவரும் வத்தலக்குண்டுவில் இருந்து மஞ்சள்பரப்பு கிராமத்திற்கு மொபட்டில் சென்றனர்.
மொபட்-சரக்கு லாரி மோதல்
திண்டுக்கல்-வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் அ' பிரிவு என்னுமிடத்தில் சென்றபோது, அவர்கள் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற சரக்கு லாரி, மொபட் மீது மோதியது. பின்னர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.
தம்பதி பலி
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மீனாச்சாமி, ஜெயக்கொடி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். தகவலறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கணவன், மனைவி 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், மீனாச்சாமி கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரை சேர்ந்தவர் என்றும், தற்போது வத்தலக்குண்டுவில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.