மாவட்ட செய்திகள்

தட்சிண கன்னடாவில் கனமழைக்கு திரைப்பட இயக்குனர் உள்பட 3 பேர் சாவு

கனமழைக்கு தட்சிணகன்னடா மாவட்டத்தில் திரைப்பட இயக்குனர் உள்பட 3 பேரும், உடுப்பியில் சிறுமியும் பலியானார்கள்.

தினத்தந்தி

மங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் வெளுத்து வாங்கிய கனமழைக்கு தட்சிணகன்னடா மாவட்டத்தில் திரைப்பட இயக்குனர் உள்பட 3 பேரும், உடுப்பியில் சிறுமியும் பலியாகி உள்ளனர். இரு மாவட்டங்களிலும் கனமழைக்கு மொத்தம் 4 பேர் இறந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்தது. மங்களூரு நகரில் கொட்டி தீர்த்த மழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் இரவு முழுவதும் இருளில் தவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளநீரில் சிக்கிக் கொண்டன. ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மழைநீரில் சிக்கி கொண்டவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மங்களூரு டவுன் உதயாவர் பகுதியில் பெய்த கனமழையின் போது வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மோகினி(வயது 60) என்ற பெண் உயிரிழந்தார். இதேப்போல கொடியால்பையல் பகுதியில் ஒரு வீட்டை வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. அப்போது வெள்ளநீரில் மூழ்கி முக்தா பாய்(80) என்ற மூதாட்டி இறந்து போனார். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து உதயாவர், பர்கி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கன்னட திரைப்பட உலகில் இயக்குனராக இருந்தவர், சந்தோஷ் ஷெட்டி (45). இவர் கனசு என்ற படத்தை இயக்கி உள்ளார். தற்போது புதியதாக ஒரு படத்தை இயக்க அவர் திட்டமிட்டு பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் படப்பிடிப்பு நடத்த இடங்களை தேர்வு செய்யும் பணிக்காக மங்களூருவுக்கு சந்தோஷ் ஷெட்டி, தனது உதவியாளர்கள் 3 பேருடன் சென்றிருந்தார்.

அப்போது தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எருமாயி நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கால் தவறி நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் விழுந்தார். தடாகத்தில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். இதை பார்த்து அவரது உதவியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெல்தங்கடி போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேற்று காலை சந்தோஷ் ஷெட்டியின் உடலை மீட்டனர். இதுபற்றி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அதேப் போல் உடுப்பி மாவட்டம் படுபித்ரியை சேர்ந்தவள் நிதி ஆச்சார்யா (9). இவளது அக்காள் நிஷா (12). இவர்கள் இருவரும் படுபித்ரியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். பின்னர் பள்ளியில் இருந்து சைக்கிளில் நிஷாவும், அவளது தங்கை நிதி ஆச்சார்யாவும் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் வெளுத்து வாங்கிய கனமழையால் அந்தப் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிறுமிகள் 2 பேரும் பட்டலா அருகே படேபெட்டு பகுதியில் உள்ள சிறிய பாலத்தை கடந்து செல்ல முயன்றனர். அந்த பாலத்திலும் மழை நீர் பெருக்கு கெடுத்து ஓடியது. அந்த சமயத்தில் இருவரும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனே அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் நிஷாவை மீட்டனர். ஆனால் சிறுமி நிதி ஆச்சார்யா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் ரப்பர் படகு மூலம் நிதி ஆச்சார்யாவை தேடினர். ஆனால் சிறுமியின் கதி என்ன? என்பது தெரியவில்லை. 2-வது நாளாக நேற்றும் நிதி ஆச்சார்யாவை தேடும் பணி நடந்தது. அப்போது சம்பவ இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நிதி ஆச்சார்யா பிணமாக கிடந்தாள். அவளது உடலை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக படுபித்ரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி படுபித்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்