கூலிவேலை
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஆஞ்சநேய நகரை சேர்ந்தவர் ரஜினி (வயது 38). இவரது மனைவி அமுலு (35). கணவன்-மனைவி இருவரும் விடையூர் காரணி பகுதியில் செங்கல் அறுக்கும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரஜினி தன் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவள்ளூரில் இருந்து அதிகத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்தது. இதன் காரணமாக நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த அமுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பரிதாப பலி
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார்.
கணவர் கண்முன்னே மனைவி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரஜினி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இந்த விபத்து சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.