மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் போராட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

சேலம்,

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து சாதி மக்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் அவரவர் பங்கை தரக் கோரியும், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் பா.ம.க சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது.

அந்தவகையில் சேலம் மாவட்ட பா.ம.க. சார்பில் சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று கூடி வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்போது, சிலர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து பா.ம.க. நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

இது குறித்து பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் அருள் நிருபர்களிடம் கூறியதாவது:-

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கடந்த டிசம்பர் 1-ந்தேதி சென்னையில் பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது 4-வது கட்டமாக இன்று(நேற்று) மாநகராட்சி அலுவலகம் முன்பு மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வரை பா.ம.க.வின் போராட்டம் தொடரும். எனவே வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எதிர்வரும் நாட்களில் போராட்டம் கடுமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த மனு அளிக்கும் போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் கார்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்.ராசரத்தினம், வடக்கு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், பசுமை தாயகம் மாநில இணை செயலாளர் சத்ரியசேகர், மாநில தேர்தல் பணிக்குழு நிர்வாகி சதாசிவம், வக்கீல் குமார், மணக்காடு ராஜமாணிக்கம், இளைஞர் சங்க நிர்வாகி விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு