நாமக்கல்,
மோகனூர் அருகே உள்ள பாலப்பட்டி பகுதியில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சதீஷ், துணை செயலாளர் ராஜா, மாநில துணை அமைப்பு தலைவர் சுதாகர், மகளிர் அணி கோமதி, பாலப்பட்டி சோழியவேளாளர் சங்க தலைவர் அருணாசலம், செயலாளர் சேகர், நகர தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
பாலப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அனைத்து சாதி மக்களும் சகோதர, சகோதரிகளாக வசித்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் பாலப்பட்டியை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 8 பேர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வன்முறைகளை தூண்டியும், பிற சாதி மக்களை அடித்து துன்புறுத்தியும் வருகின்றனர். தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதோடு மட்டும் இல்லாமல், சாதி கலவரத்தை தூண்டும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவர் மீதும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே அவர்கள் 8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.