கீழ்பென்னாத்தூர்,
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி நடந்தது. இந்த பணியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பிளிச்சிங் பவுடர் சரியான விகிதத்தில் கலந்துள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
இதையடுத்து திட்ட இயக்குனர் லோகநாயகி, பொதுமக்களிடம் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளில் பள்ளம் தோண்டி குடிநீர் எடுப்பவர்கள் இணைப்புகள் துண்டிக்கப்படுவது மட்டுமின்றி அபராதமும் விதிக்கப்படும் என்றும், ஒவ்வொரு வரும் தங்கள் வீட்டை சுற்றிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். டெங்கு கொசு பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். பின்னர் அணுக்குமலைக்கு சென்ற திட்ட இயக்குனர், அங்குள்ள அம்மா பூங்காவை பார்வையிட்டார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாதேவன், ரபியுல்லா, ஒன்றிய பொறியாளர் சிவா, உதவி பொறியாளர் இந்திராகாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள், சோமாசிபாடி ஊராட்சி செயலாளர் சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.