மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் மாவட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

கரூர்,

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடராஜருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் நடராஜர் வடிவில் சிவபெருமான் காலை தூக்கி நடனமாடுவதை போல், சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார். அப்போது மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின்னர் நடராஜர், அம்பாளுடன் சேர்ந்து சப்பரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தார்.

மட்டையடி உற்சவம்

அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில் மட்டையடி உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடராஜருக்கும், அம்பாளுக்கும் சிறு ஊடல் ஏற்பட்டதன் காரணமாக பசுபதீஸ்வரர் கோவிலில் தனித்தனியாக எழுந்தருளினர். அப்போது அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு சுந்தரமூர்த்திநாயனார் பல்லக்கில் வந்து, அம்பாளிடம் முறையிட்டு சமாதானம் செய்தார். இதனை விளக்கும் விதமாக தண்டபாணி தேசிகர், சுந்தரராக தன்னை பாவித்து நடந்த நிகழ்ச்சிகளை கூறி தூது சென்றார். அப்போது 2-வது முறையாக சென்ற போது, அம்பாளின் பணிப்பெண்கள் பூக்களால் சுந்தரரை அடிப்பது புராண வரலாறு ஆகும்.

அந்த வகையில் தூது சென்ற தண்டபாணி தேசிகருக்கு வாழை மட்டையால் அடி விழுந்தது போல் அரங்கேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து சண்டிகேசுவரருடன், சேர்ந்து வந்து சுந்தரமூர்த்தி பேசும் போது அம்பாளின் கோபம் தணிந்து தெளிவு பெற்றார். பின்னர் நடராஜருடன், சேர்ந்து அவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கிடையே நிகழ்ச்சியின் போது பக்தர்கள் முண்டியடித்து கொண்டு வந்து, தங்களது முதுகினை காட்டி வாழைமட்டையால் அடி வாங்கி சென்றனர். இதன் மூலம் குழந்தை செல்வம், வியாபார விருத்தி உள்ளிட்டவை உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குளித்தலை

குளித்தலை அருகே சிவாலயத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி உடனுறை சிவபுரீசுவரர் கோவில் உள்ளது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு மாணிக்கவாசகர் புறப்பாடு, சுந்திரசேகரர் சுவாமி நூறுகால் மண்டபத்தில் ஊஞ்சல் நிகழ்ச்சியும் பிச்சாடன மூர்த்தி நந்தவனம் அழித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை பால், தயிர், நெய், தேன், எண்ணெய், பழங்கள் மற்றும் திரவியப்பொடிகள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு நடராஜர் மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை மலர்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் குளித்தலை உள்பட சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்காரும் உதவி ஆணையருமான சூரியநாராயணன், கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி, உபயதாரர்கள் மற்றும் கோவில் பணியாளர்களும் செய்திருந்தனர்.

லாலாபேட்டை

லாலாபேட்டையில் பிரசித்தி பெற்ற செம்பூர் ஜோதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் பரிவார தெய்வங்களான நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தோகைமலை

தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்கள் கோவில்களில் நடைபெற்ற ஆருத்ரா (திருவாதிரை) தரிசனத்தின் கலந்து கொண்டு சிறப்பு பிராத்தனை செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் மாங்கலியத்திற்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று நேற்று அதிகாலை காலை 4 மணிக்கு உணவு அருந்திய பிறகு நாள் முழுவதும் விரதம் இருந்தனர். பின்னர் அறுசுவை உணவு படைத்து, ஏழு வகையான காய்கறிகளை வைத்து நெய்யினால் அடை சுட்டு சிவபெருமானுக்கு படைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் கணவர் கையால் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். அதேபோல ஆண்களும் கையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்