வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஸ்டீபன் ஜோஸ். இவர் அந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக, பணகுடியை சேர்ந்த வக்கீல் சரவணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார். ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.
இதையடுத்து ஸ்டீபன் ஜோஸ், வக்கீல் சரவணனின் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவி மற்றும் 2 வயது குழந்தையை இரவு நேரத்தில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டரை பாராட்டியும், வக்கீல்கள் குறித்து அவதூறாக சித்தரித்தும் பணகுடி பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து வள்ளியூர் வக்கீல்கள் சங்கம் சார்பில், ஸ்டீபன் ஜோஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ரூ.10 லட்சம் மான நஷ்டஈடு கேட்டும் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, ஸ்டீபன் ஜோசுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜராகவில்லை. ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து ஸ்டீபன் ஜோசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி காமராஜ் உத்தரவிட்டார்.
தற்போது ஸ்டீபன் ஜோஸ் மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.