பழனி,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமுருகனை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று பழனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது, அவர் குற்றவாளி என்றும், ஆட்சி, நிர்வாகம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது. அமைச்சர்கள் பலரின் ஊழல் குறித்தும், தரக்குறைவாக பேசியவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ். ஆனால் அதையெல்லாம் மறந்து மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து இந்த கூட்டணியை வைத்துள்ளனர். திண்டுக்கல் தொகுதியை பா.ம.க. வுக்கு தாரை வார்த்தது அ.தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள், ஆனால் ராமதாசுடன் கூட்டணி வைத்ததுதான் மானங்கெட்ட கூட்டணி. இது கட்சிக்கும், தொண்டர்களுக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். இதை பார்த்துக் கொண்டு சகித்துக் கொள்ள தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. இவ்வளவு பேசியவர்களுடன் கூட்டணி வைத்ததற்கு உரிய இடத்தில் நான் இருந்தால் நடுரோட்டில் தூக்குப்போட்டு தொங்கி இருப்பேன்.
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரும் வெற்றியை பெற்று, மதசார்பற்ற ஒருவரை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கும் நிலை விரைவில் வரும். அ.தி.மு.க. இடைத்தேர்தலில் 8 தொகுதிகள் வெற்றி பெறவில்லை என்றால் பழனிக்கு வந்து எடப்பாடி பழனிசாமி மொட்டை போட வேண்டியதுதான். கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பாளராக நிற்கும் அதேநேரத்தில், அவருக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சியினர் வரிந்து கட்டுகிறார்கள். இதுதான் அவர்களுடைய கூட்டணியின் நிலை.
பழனி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆயக்குடியில் கொய்யாப்பழம் பதப்படுத்தும் ஆலை, சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் பச்சையாறு அணை ஆகிய திட்டங்கள் நிறைவேற வேண்டும் என்றால் அ.ம.மு.க. வேட்பாளர் ஜோதிமுருகனை வெற்றிபெற வைக்க வேண்டும்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.
இதைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரத்துக்கு சென்ற டி.டி.வி.தினகரன் அங்கு பிரசாரம் செய்தபோது பேசுகையில், இந்த இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறவில்லை என்றால் மோடியானாலும் சரி, டாடி ஆனாலும் சரி ஆட்சியை காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் தி.மு.க.வினர் ஓட்டல்கள் உள்பட அனைத்து இடங்களில் செய்யும் அராஜகம் தாங்க முடியவில்லை. இவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்துக்கு போனால் என்ன கூத்து நடக்கும் என்றே தெரியவில்லை என்றார்.
இந்த பிரசாரத்தில் மாநில கழக அமைப்பு செயலாளர் குமாரசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி, பழனி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், பழனி நகர செயலாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.