தேனி,
தேனி அருகே மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கெப்புரெங்கன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கொட்டக்குடி ஆற்றுக்கு செல்லும் பாதை, தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடந்தது.
போடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரஞ்சோதி தலைமையில், வருவாய் ஆய்வாளர் சுடர்விழி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் விக்னேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி மற்றும் போலீசார் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றுக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து மக்காச்சோளம், தென்னை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. அவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
அப்போது, ஒன்றிய கவுன்சிலர் விக்னேஸ்வரன் மற்றும் அவருடைய தந்தை துரைராஜ் ஆகியோருடன், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தரப்பில் சிலர் தகராறு செய்தனர். இதில், சிலர் தாக்கியதில் துரைராஜின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்த போலீசார் தகராறை விலக்கி விட்டனர்.
காயம் அடைந்த துரைராஜ் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஒன்றிய கவுன்சிலர் விக்னேஸ்வரன் தரப்பிலும், மற்றொரு தரப்பிலும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி கூறுகையில், இந்த பாதையை மீட்க வேண்டும் என்று கிராம ஊராட்சியில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகே ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இங்கு பொதுகழிப்பிட வசதி, அம்மா விளையாட்டு பூங்கா போன்றவை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.