ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. 
மாவட்ட செய்திகள்

“பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்த கட்சி தி.மு.க.”- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்த கட்சி தி.மு.க. என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

தினத்தந்தி

மதுரை விளாச்சேரியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பூத் கமிட்டி திட்டம்

ஊழல் என்ற வார்த்தைக்கு இலக்கணமே தி.மு.க. தான். கருணாநிதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தான் ஊழல்களும், முறைகேடுகளும் தமிழகத்தில் அரங்கேறின. அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது தான் வீராண ஏரி ஊழல், பூச்சி மருந்து ஊழல், சர்க்கரை ஊழல் என மொத்தம் 28 ஊழல்கள் நடந்தன. இந்த ஊழல் குறித்து விசாரணை கமிஷனின் நீதிபதி சர்க்காரியாவே, கருணாநிதியும், தி.மு.க.வும் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்து இருக்கிறார்கள் என்று கூறினார். மாநில ஆட்சியில் மட்டுமின்றி, மத்தியிலும் வருமானம் தரும் துறைகளை வாங்கி கொண்டு ஊழல் செய்வதில் தி.மு.க. முதன்மையாக இருக்கிறது. ஊழல் பணத்தை காக்கவும், குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்து கொள்ளவும் தி.மு.க. தமிழக மக்களின் உரிமைகளை எல்லாம் பறிகொடுத்தது. முல்லை பெரியாறு அணையை கேரளாவிடமும், காவிரி உரிமையை கர்நாடகத்திடமும் தி.மு.க. பறிகொடுத்தது.

பஞ்சபூத ஊழல்

ஆனால் கருணாநிதி தாரை வார்த்த தமிழக உரிமைகளுக்காக சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்போராட்டம் நடத்தி ஜெயலலிதா வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் தான் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. அன்று உயர்த்தப்பட்ட காரணத்தால் தான் மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி இருக்கிறார். அதே போல் காவிரியில் நமக்கான உரிமை மீட்கப்பட்டு, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஊழல், காற்றில் கொள்ளையடித்த 2ஜி ஊழல் தான். இந்த ஊழல் செய்தது தி.மு.க.வின் ஆர்.ராசா. அவரும், கருணாநிதி போல் விஞ்ஞான ரீதியாக இந்த ஊழலை செய்து உள்ளார். ஆர்.ராசா ஊழல் குறித்து பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. தி.மு.க.வின் நாடக பேச்சுகளுக்கு மக்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்.

காற்றில் மட்டுமல்ல தி.மு.க. பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து உள்ளது. காற்றில் நடந்தது 2ஜி ஊழல். அடுத்தவர்களின் இடங்களை எல்லாம் அபகரித்து நிலத்தில் ஊழல், சேதுசமுத்திர திட்டம் என்ற பெயரில் நீரில் ஊழல், தி.மு.க. ஆட்சியில் தீயணைப்பு துறையில் நடந்த நெருப்பு ஊழல், ஆகாயத்திலும் ஊழல் என தொடர்ந்து ஊழல் செய்து உள்ளனர். ஊழல்கள் மட்டுமல்ல தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட இன்னல்கள் ஏராளம். அதை யாரும் மறக்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்