அம்பத்தூர்,
சென்னை கொரட்டூரில் உள்ள சென்டிரல் அவென்யூ சாலை வழியாக தினமும் கனரக வாகனங்கள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கள்ளிக்குப்பம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகிறது.
இந்த சாலையின் 4 சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இங்கு போக்குவரத்து சிக்னல் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துகள் நேரிடும்.
எனவே இந்த சென்ட்ரல் அவென்யூ பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசோ, மாநகராட்சியோ இதை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் கொரட்டூர் பொது நல சங்கத்தின் வேண்டுகோளின்படி கல்வி நிலையங்கள் நடத்தும் தனியார் அறக்கட்டளை ஒன்று இந்த சந்திப்பில் ரூ.3 லட்சம் செலவில் தானியங்கி சிக்னல் அமைத்து கொடுத்தது.
ஆனால் சிக்னல் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் போக்குவரத்து போலீசாரோ, கொரட்டூர் போலீசாரோ அந்த சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் 4 சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து நேரிடும் அவலநிலையே நீடிக்கிறது. போலீசாரின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக இந்த சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.