மாவட்ட செய்திகள்

ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு ரூ.484½ கோடி செலவில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம்

ஈரோடு மாநகராட்சி முழுவதும் ரூ.484½ கோடியில் உருவாக்கப்பட்டு வரும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் நடந்த விழாவில் திறந்து வைத்தார்.

தினத்தந்தி

முதல் குடிதண்ணீர் திட்டம்

ஈரோடு மாநகராட்சி சுமார் 110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி சுமார் 5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு காவிரியில் இருந்து நீரேற்று நிலையங்கள் மூலம் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த 2008-ம் ஆண்டு முதல் மாநகராட்சி என்ற அந்தஸ்துடன் இயங்கி வருகிறது. முன்பு ஈரோடு நகராட்சியாக இருந்தபோது சுமார் 8 சதுர கிலோ மீட்டர், 40 வார்டுகள் என்ற அளவில் செயல்பட்டு வந்தது. இங்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் தந்தை பெரியார் ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்தபோது அமல்படுத்தப்பட்டது. கி.பி.1917-1918-ம் ஆண்டுகளில் ஈரோடு நகராட்சி பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வைராபாளையத்தில் இருந்து காவிரி தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட்டு வ.உ.சி.பூங்கா பகுதியில் செங்கோட்டை வடிவ தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வீதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

மேட்டூர் தண்ணீர்

பின்னர் இந்த திட்டம் விரிவு அடைந்தது. வைராபாளையத்தில் இருந்து நீரேற்றம் செய்யும் இடத்தில் கழிவுகள் அதிக அளவில் கலப்பதால், கோடை காலங்களில் குடிநீர் துர்நாற்றம் வீசும் அளவுக்கு மோசமாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, சாய-சலவை ஆலைகளின் கழிவுகள் கலந்த குடிநீரை ஈரோடு மக்கள் குடிக்கும் அவலம் ஏற்பட்டது. எனவே ஈரோடு நகர் பகுதிக்கு மேட்டூரில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது.ஒரு கட்டத்தில் மேட்டூரில் இருந்து குடிநீர் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை, மக்கள் இயக்கமாகவும் மாறியது. இந்தநிலையில் ஈரோடு நகராட்சி கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக மாறியது.

ஊராட்சிக்கோட்டை

மாநகராட்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, ஈரோடு மாநகருக்கு ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிதண்ணீர் வழங்கப்படும் என்று அறிவித்தார். பின்னர் 2011-ம் ஆண்டு ஈரோடு மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. ஈரோடு நகராட்சியை ஒட்டி இருந்த வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய 3-ம் நிலை நகராட்சிகள், பி.பி.அக்ரகாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், முத்தம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகள் இணை உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் இணைக்கப்பட்டு ஈரோடு மாநகராட்சியாக செயல்பட தொடங்கியது. ஏற்கனவே இந்த பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வந்தாலும், ஈரோடு மாநகராட்சிக்கு என்று அறிவிக்கப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மட்டுமே பாதுகாப்பான குடிநீரை வழங்க முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தீர்மானம்

இந்தநிலையில் 2011-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மறைந்த முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். அதன்படி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஈரோடு மாநகராட்சியிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று மேயராக மல்லிகா பரமசிவம் பதவி ஏற்றார்.

அதைத்தொடர்ந்து தேர்தல் அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் பணிகள் நடந்தன. இதற்காக ஈரோடு மாநகராட்சியின் சார்பில் 2013-ம் ஆண்டு மாநகராட்சி கூட்டத்தில் அப்போதைய மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, திட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கின.

கடும் முயற்சிகள்

இதனால் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன், ஈரோடு மாநகராட்சியின் பங்களிப்புடன் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக மத்திய அரசின் ஒப்புதலை பெற ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மக்களின் சார்பில் அ.கணேசமூர்த்தி எம்.பி. கடும் முயற்சிகள் எடுத்தார். இதனால் மத்திய அரசு இந்த திட்டத்துக்கு 50 சதவீதம் நிதி வழங்கவும், மாநில அரசு 20 சதவீதம் நிதி வழங்கவும், ஈரோடு மாநகராட்சியின் பங்களிப்பாக 30 சதவீதம் நிதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வந்தது. அ.தி.மு.க. சார்பில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் அமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார். அதுமட்டுமின்றி மாநில அரசின் முயற்சியால், மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.484 கோடியே 45 லட்சம் செலவில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை, ஈரோடு மாநகராட்சிக்கான தனி குடிநீர் திட்டமாக செயல்படுத்த 29-8-2016 அன்று அரசு உத்தரவு வெளியிடப்பட்டது.

நிதி பங்களிப்பு

மத்திய அரசு ரூ.242 கோடியே 23 லட்சம், மாநில அரசு ரூ.96 கோடியே 89 லட்சம், மாநகராட்சி பங்களிப்பு ரூ.145 கோடியே 33 லட்சம் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்தார். அவருக்கு பின்னர் முதல்-அமைச்சராக வந்த எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 2017-ம் ஆண்டு பணிகளை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோரும் இந்த திட்டத்தை கொண்டு வர முதல்-அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.அதைத்தொடர்ந்து எல் அன்டு டி நிறுவனம் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை வரதநல்லூர் பகுதியில் பிரமாண்ட நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறது. அங்கிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவு குழாய் மூலம் ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள பிரமாண்ட தொட்டியில் சேமிக்கப்பட்டு அங்கிருந்து மாநகராட்சி முழுமைக்கும் 67 மேல்நிலை தொட்டிகள் மூலம் வினியோகம் செய்யப்படும். இந்த திட்டத்தில் மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் நேரடியாக வினியோகம் செய்யப்பட உள்ளது.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

இந்த திட்டப்பணிகள் 90 சதவீதத்துக்கும் மேல் முடிவடைந்து கடந்த 3 மாதங்களாக சோதனை ஓட்ட நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை (ஈரோடு மாநகராட்சி தனி குடிநீர் திட்டம்) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கும் விழா நேற்று நடந்தது. சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். அப்போது ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள நீரேற்று தொட்டி வளாகத்தில் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பாராட்டு

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை முன்னிலை வகித்தார். விழாவில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய மாவட்ட நிர்வாக பொறியாளர் க.தங்கவேல், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனா பழனிச்சாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் வீரக்குமார், நந்தகோபால், மீன் ராஜா என்கிற ராஜசேகர், பகுதி செயலாளர் முருகுசேகர், அரசு வக்கீல் துரைசக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் மற்றும் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், ஒப்பந்ததாரருக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு