வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுக்குடி ஊராட்சியில் பூமிதானம் தெரு உள்ளது. இந்த தெருவுக்கு செல்ல வேண்டும் எனில் தார்ச்சாலையில் இருந்து 200 மீட்டர் நீளத்துக்கு வயல் வரப்பின் மீது நடந்து செல்ல வேண்டும். சாலை வசதி இல்லை. அங்கு யாரேனும் இறந்தால் அவர்களுடைய உடலை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வயல் வழியாகத்தான் சுடுகாட்டுக்கு தூக்கி செல்கிறார்கள். நேற்று அந்த தெருவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்து விட்டார். அவருடைய உடலை வயல் வழியாக தூக்கி சென்றனர். வயல் வழியாக உடலை தூக்கிச்செல்லும்போது சிலர் கால் தடுமாறி கீழே விழுவதும் அடிக்கடி நடக்கிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து அந்த பகுதிக்கு உரிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.