மாவட்ட செய்திகள்

உடுமலைக்கு அழகு சேர்க்கும் நீர்த்தேக்க குளமாக இருந்த குட்டை திடல் வாகன நிறுத்துமிடமாக மாறிய அவலம் பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலைக்கு அழகு சேர்க்கும் நீர்த்தேக்க குளமாக இருந்த குட்டை திடல், வாகன நிறுத்துமிடமாக மாறிவிட்டது. இந்த குட்டை திடலை பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

போடிப்பட்டி

உடுமலைக்கு அழகு சேர்க்கும் நீர்த்தேக்க குளமாக இருந்த குட்டை திடல், வாகன நிறுத்துமிடமாக மாறிவிட்டது. இந்த குட்டை திடலை பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது குட்டை திடல். இந்த பகுதிக்கு அருகில் போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், நீதிமன்ற வளாகங்கள், திருமண மண்டபங்கள், நூலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளது. மேலும் இந்த பகுதிக்கு அருகிலுள்ள தளி சாலை மற்றும் கச்சேரி வீதியிலுள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய இட வசதி இல்லை. எனவே சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக நான்கு சக்கர வாகனங்களை குட்டை திடலில் நிறுத்தி விட்டு வருமாறு போக்குவரத்து போலீசார் வலியுறுத்துகின்றனர்.

இதனால் குட்டை திடல் முழுவதும் வாகன நிறுத்துமிடமாக மாறி விட்டது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் மேடும் பள்ளமுமாக மாறிக் கிடக்கிறது. எனவே பாரம்பரியம் மிக்க குட்டை திடலை பராமரிக்கவும் அழகு படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கசிவு நீர்க்குட்டை

தற்போது வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள குட்டை திடலுக்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு.

உடுமலை நகரின் நிலத்தடி நீர் மட்டம் மேம்படுவதில் இந்த குட்டைக்கு முக்கிய பங்கு உண்டு என்பது ஆச்சரியமான உண்மையாகும். இன்று குட்டை திடல் என்று அழைக்கப்படும் இந்த பகுதி உண்மையிலேயே ஒரு நீர்தேக்கக் குட்டையாகவே இருந்துள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் 3 மதகுகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலான படித்துறைகள் என்று உடுமலைக்கு அழகு சேரயில் அமைந்திருந்த கசிவு நீர்க்குட்டையே படிப்படியாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை பாலாற்றில் பெருக்கெடுக்கும் நீர் செங்குளம், பெரிய குளம், தினைக்குளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட ஏழு குளங்களை நிரப்புகிறது. பின்னர் இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் தங்கம்மாள் ஓடை வழியாக இந்த குட்டைக்கு வந்து சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

காலம் காலமாக நீர் நிலைகள் பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியத்தால் குட்டைக்கான நீர் வழித்தடங்கள் படிப்படியாக அளிக்கப்பட்டு விட்டது. அதன் பலனாக நீரோடிய வழித்தடங்களில் இன்று காரோடும் நிலை ஏற்பட்டு விட்டது. பிரம்மாண்டமாக பரந்து விரிந்து ஆறு போல ஓடிய தங்கம்மாள் ஓடை இன்று ஆக்கிரமிப்புகளால் குறுகியும் நாகரிக வளர்ச்சியின் எச்சங்களால் குப்பை கூளங்களுடன் குறுகிய சாக்கடைக் கால்வாயாக மாறி விட்டது. குட்டை திடலோ வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் குப்பைகள் கொட்டுமிடமாகவும் மாறி விட்டது. ஆண்டுதோறும் மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவின் போது இந்த குட்டைக்கு புத்துயிரூட்டப்படும். ராட்டினங்கள், கடைகள், கலை நிகழ்ச்சிகள் என்று இந்த பகுதி முழுவதும் களை கட்டும்.

ஆய்வு செய்ய வேண்டும்

அந்தவகையில் வருவாய்துறைக்கு பல லட்சங்கள் வருமானம் தரக்கூடியதாக உள்ள இந்த குட்டை திடலை மற்ற நேரங்களில் வருவாய்த்துறையினர் கண்டு கொள்வதில்லை. குட்டையை ஒட்டி கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள் நகராட்சிக்கு வருமானம் தருகிறது. ஆனால் இதனை ஒட்டி உள்ள நூலகத்தில் வாசகர்கள் மூக்கை பொத்திக் கொள்ளுமளவுக்கு இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போதைய நிலையில் முழுவதும் திடலாக மாறிவிட்ட குட்டையை மீண்டும் நீர்நிலையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அதற்கான சூழல் இல்லாத பட்சத்தில் குட்டை திடலை சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இந்த திடலைச் சுற்றி பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு மைதானம், நடைபயிற்சிக்கான வசதி போன்றவை செய்து கொடுத்து உடுமலை மக்களின் ஆரோக்கியத்தில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்