மாவட்ட செய்திகள்

ஈரோடு பெரியவலசு பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

ஈரோடு பெரியவலசு பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ஈரோடு மாநகர் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக பல்வேறு மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் பறவை இனங்கள் அழிந்து வருகின்றன. எனவே வனத்துறையினர், மாணவர்கள் உதவியுடன் கணக்கீடு செய்து மாநகர் பகுதியில் வாழும் பறவை இனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் இயற்கை விவசாய பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும். அந்தியூர் சென்னம்பட்டியில் செயல்படும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு பெரியவலசு சாணக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

எங்கள் பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, பாதாள சாக்கடை மற்றும் மின் கேபிள் பதிக்கும் பணிக்காக எங்கள் பகுதியில் உள்ள ரோட்டில் குழி தோண்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து பணிகள் முடிவடைந்து குழிகள் நிரப்பப்பட்டன. அப்போது ரோட்டின் ஓரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மண் விழுந்ததால் தண்ணீர் வரவில்லை. இதனால் கடந்த 3 மாதங்களாக நாங்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மதுரைவீரன் மக்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பெ.ஆறுமுகம் கொடுத்திருந்த மனுவில், கொங்கு மண்டலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து விடுதலை போராட்டத்தை தொடங்கிய தீரன் சின்னமலையின் ஒப்பற்ற தளபதியாக பொல்லான் இருந்தார். அவர் வெள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட இடமான ஜயராமபுரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மேலும் பொல்லானின் உருவச்சிலை வைத்து அரசு விழா நடத்திட வேண்டும் என்று கூறி இருந்தார்.

தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு மையம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய 700 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அந்தியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சலவை, சவர தொழிலாளர்கள் கொடுத்திருந்த மனுவில், நாங்கள் 130 பேர் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்து இருந்தோம். அதைத்தொடர்ந்து எங்களுக்கு அந்தியூர் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தை தற்போது தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, செங்கல்சூளை வைத்து நடத்தி வருகிறார். எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி இருந்தனர்.

வெண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், வெண்டிபாளையம் ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனால் அந்த பகுதியை ஆபத்தான பகுதியாக அறிவித்து பொதுமக்கள் கடந்து செல்ல ஆவன செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 307 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உள்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்