ஈரோடு,
கொரோனா ஊரடங்கு காரணமாக தினமும் மக்கள் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ரேஷன் கடையின் இலவச பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நின்ற மக்கள் கூட்டம் குறைந்து அம்மா உணவகங்களில் இலவச உணவுக்காக வரிசையில் நிற்கும் நிலை அதிகரித்து இருக்கிறது.
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் காலை, மதியம், இரவு உணவுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த உணவை வாங்கி சாப்பிட அந்தந்த சுற்று வட்டார பகுதி மக்கள், ஆதரவற்றோர் என பலரும் வருகிறார்கள். அம்மா உணவகங்களில் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டம் போடப்பட்டு உள்ளது. இதில் வரிசையில் நின்று உணவு வாங்கிச்செல்கிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு வாங்க வழக்கமாக வரிசையில் நிற்கும் சிலர் முன்கூட்டியே இடைவெளிக்கான வட்டத்தில் செருப்புகளை வைத்துவிட்டு ஆங்காங்கே காத்து இருந்தனர். வரிசையில் வந்து வெயிலில் நிற்க முடியாது என்பதால் இப்படி செருப்புகளை வைத்துவிட்டு எப்போது உணவகம் திறக்கும் சாப்பிடலாம் என்று ஆதரவற்றவர்கள் மட்டுமின்றி, வீடுகளில் சமைக்க எதுவும் இல்லாதவர்களும் வரிசைக்கு வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுபோல் ஈரோடு சூளை அம்மா உணவகத்திலும் நேற்று மதிய உணவுக்காக ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் வரிசையில் காத்து நின்றனர்.