மாவட்ட செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவேண்டும் பயணிகள் கோரிக்கை

ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு ரெயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் உள்ளன. டிக்கெட் வாங்கும் இடத்தில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல படிக்கட்டு வழியை பயன்படுத்த வேண்டும். இந்த படிக்கட்டுகளில் கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஏற மிகவும் சிரமப்பட்டனர். எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் நடைமேடைகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்), லிப்ட் ஆகியன அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து முதல் மற்றும் 2-வது நடைமேடைகளுக்கு ஒரு லிப்ட்டும், 3-வது, 4-வது நடைமேடைகளுக்கு ஒரு லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டும் அமைக்கப்பட்டன. இந்த நகரும் படிக்கட்டையும், லிப்ட்டுகளையும் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் முதலாவது, 2-வது நடைமேடைகளுக்கு செல்லும் படிக்கட்டுகளுக்கு அருகில் நகரும் படிக்கட்டு அமைக்கப்படாமல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலாவது, 2-வது நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நகரும் படிக்கட்டு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக நடைமேடைக்கு செல்லும் படிக்கட்டுகள் பாதியாக உடைக்கப்பட்டு ஆழமான குழிகள் தோண்டப்பட்டன. இதனால் படிக்கட்டுகள் குறுகலாக காணப்படுவதுடன் அதன் வழியாக பயணிகள் ஏறி, இறங்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ஈரோடு ரெயில் நிலையத்தின் முதலாவது, 2-வது நடைமேடைகளுக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரெயில் வரும்போது ஏராளமான பயணிகள் வந்து இறங்குகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் படிக்கட்டு வழியாக இறங்குகின்றனர். அந்த சமயம் அவசர அவசரமாக ரெயிலை பிடிக்க செல்லும் பயணிகள் படிக்கட்டு வழியாக ஏறிச்செல்ல சிரமப்படுகிறார்கள். மேலும், சென்னை உள்பட வடமாவட்டங்களுக்கு செல்லும் அதிகமான ரெயில்கள் முதலாவது நடைமேடைக்கும், கோவை, கேரளா செல்லும் ரெயில்கள் 2-வது நடைமேடைக்கும் வருகின்றன. இதனால் இந்த 2 நடைமேடைகளும் எப்போதும் பரபரப்பாக காணப்படும். எனவே நடைமேடைக்கு செல்லும் வழியில் நடந்து வரும் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்