சிவமொக்கா,
கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நேற்று சிவமொக்காவில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடந்தது. சிவமொக்கா கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட பா.ஜனதா தலைவர் ருத்ரேகவுடா, முன்னாள் எம்.பி. ஆயனூர் மஞ்சுநாத் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்கள் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து ஈசுவரப்பா தலைமையிலான பா.ஜனதாவினர், கலெக்டர் லோகேசை சந்தித்து அவர் மூலம் தங்கள் கோரிக்கை மனுவை கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக இந்த போராட்டத்தின்போது ஈசுவரப்பா பேசியதாவது:
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தில் சட்டம்ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இதுகுறித்து நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும், சட்டம்ஒழுங்கை சரி செய்ய மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ் அதிகாரி தற்கொலை வழக்கில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருப்பது வெட்ககேடான செயல்.
இதேபோல, பா.ஜனதாவை சேர்ந்த தார்வார் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் யோகேஷ்கவுடா கொலை வழக்கில் மந்திரி வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுக்கிறார். குற்ற வழக்கு மற்றும் ஊழல் மந்திரிகளை சித்தராமையா பாதுகாக்கிறார். மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், வினய் குல்கர்னி உடனடியாக பதவி விலக வேண்டும். அவர்கள் பதவி விலகும் வரை பா.ஜனதா கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.