மாவட்ட செய்திகள்

கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் தர்ணா போராட்டம்; கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை

கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் கந்தசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

போளூர் அருகே உள்ள கரைப்பூண்டி கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.26 கோடி பாக்கி தொகையை வழங்கக் கோரி கடந்த 24ந் தேதி முதல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 25ந் தேதி தனியார் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அன்று ஆரணி உதவி கலெக்டர் மைதிலி தலைமையில் திருவண்ணாமலை வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகன், போளூர் தாசில்தார் ஜெயவேல், ஆலை தரப்பில் நிர்வாகத்தை சேர்ந்த செங்கோட்டையன், கந்தசாமி, விவசாயிகள் சங்க தரப்பில் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில் ஆலை நிர்வாகம் வருகிற மார்ச் மாதம் 31ந் தேதிக்குள் நிலுவைத்தொகை ரூ.26 கோடியை வழங்குவதாகவும் அதற்கு முன்பாக அந்த தொகை வழங்க இயலாது என்று தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து கரும்பு விவசாயிகள் மாவட்ட கலெக்டரை சந்திக்க முடிவு செய்து நடைபயணம் மேற்கொண்டனர்.

அப்போது 100 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். நேற்று முன்தினம் பகல் சுமார் 2.30 மணி அளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நுழைவுவாயில் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இரவு சுமார் 10 மணி வரை விவசாயிகள் அங்கு காத்திருந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நேற்று காலை மீண்டும் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கையை வலியுறுத்தி பேசுவதற்காக வந்தனர். முதலில் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கையில் கரும்பை வைத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அழைத்து சென்றனர்.

கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலையில் விவசாயிகள் தரப்பை சேர்ந்த 10 விவசாயிகள் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்தது. பின்னர் ஆலை நிர்வாகத்தினர், வருகிற மார்ச் 15ந் தேதி முதல் 31ந் தேதிக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

கரும்பு விவசாயிகளின் தொடர் போராட்டத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு