ஓசூர்:
ஓசூரில் உழவர் சந்தையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் சந்தை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் ஓசூர் உழவர் சந்தையை தற்காலிகமாக மூட நடவடிக்கை மேற்கொண்டது. இங்கு கடைகள் நடத்தி வரும் விவசாயிகளின் நலன் கருதி ஓசூர் காமராஜ் காலனி, தளி சாலை சந்திப்பு ஆகிய 2 இடங்களில் சந்தைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. உழவர் சந்தையை தற்காலிகமாக மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று உழவர் சந்தை முன்பு விவசாயிகள் சாலையில் அமர்ந்தும், சாலையில் படுத்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
ஆனால் விவசாயிகள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மதியம் 1 மணி வரை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் காமராஜ் காலனி மற்றும் தளி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.