கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கொட்டாரம் அருகே மந்தாரம்புதூர் கீழத்தெருவில் 24 வீடுகள் உள்ளன. இந்த தெருவில் 5 மின்கம்பங்கள் நடப்பட்டிருந்தது. இதில் சில மின்கம்பங்களின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் இருந்தது.
இந்த மின்கம்பங்களை சீரமைக்கக்கோரி அந்த தெருவை சேர்ந்தவர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினர். ஆனால் மின்வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் ஆனந்தி என்பவருடைய வீட்டின் எதிரே இருந்த மின்கம்பம் முறிந்து மின்கம்பிகளுடன் வீட்டு காம்பவுண்ட் சுவர் மீது விழுந்தது. அதன் தொடர்ச்சியாக பாரம் தாங்காமல் மற்ற 4 மின்கம்பங்களும் முறிந்து விழுந்தது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மின்கம்பங்கள் கீழே விழுந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாடவில்லை.
இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இரவாகியும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வரவில்லை. சீரமைக்கும் பணி நடைபெறாததால் அந்த தெரு நேற்று இரவு முழுவதும் இருளில் மூழ்கின.