தந்தையின் மரணமும், தந்தை செய்து வந்த கல்வி சேவையும் இந்த பணியில் தொடர்ந்து அவரை ஈடுபட வைத்திருக்கிறது. அவரது பெயர் மன்னிம் ஸ்ரீதர் ரெட்டி.
தெலுங்கானா அரசின் நிதி துறையில் கணக்கராக பணியாற்றி வருகிறார். இவருடைய பூர்வீகம் தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாலகுடா கிராமம். இந்த பகுதி நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்தது.
இவருடைய தந்தை சங்கர் ரெட்டி பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர். 1998-ம் ஆண்டு அவர் தனது நண்பரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பார்க்க போலீஸ் நிலையம் சென்றிருக்கிறார். அப்போது நக்சலைட்டுகள் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
சங்கர் ரெட்டி பஸ் ஊழியருக்கான காக்கி சீருடையில் இருந்ததால் அவர்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று தவறுதலாக நினைத்து அவரை நக்சலைட்டுகள் சுட்டுக்கொன்றுவிட்டனர். இதையடுத்து கருணை அடிப்படையில் ஸ்ரீதர் ரெட்டிக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது.
அந்த சமயத்தில் நான் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். படித்து முடித்தபிறகு ஆஸ்திரேலியாவுக்கு சென்று உயர்கல்வி படிக்க ஆசைப்பட்டேன்.தந்தையின் திடீர் இறப்பு எங்கள் குடும்பத்தை நிலைகுலைய செய்துவிட்டது. பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டோம். தந்தையின் மரணம் காரணமாக அரசு வேலை கிடைத்ததால் ஐதராபாத்துக்கு குடியேறினேன் என்கிறார்.
எனது தந்தை வருடம்தோறும் குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று அரசு பள்ளிக்கூடத்திற்கு சென்று ஏழை குழந்தைகள் படிப்புக்கு நிதி உதவி செய்வதையும், அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அவரது வருகையை எதிர்பார்த்து பள்ளி நிர்வாகமும், மாணவ-மாணவிகளும் காத்திருந்திருக்கிறார்கள். அவர் இறந்துவிட்டார் என்ற தகவலை ஆசிரியரிடம் சொன்னபோது அவர் மிகுந்த வேதனையடைந்தார்.
உடனே என் சேமிப்பு கணக்கில் இருந்து 90 ஆயிரம் ரூபாய் எடுத்து பெஞ்சுகள் வாங்கி கொடுத்தேன். அதன் பிறகு ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் விளையாட்டு போட்டியும், கலை நிகழ்ச்சியும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறேன் என்கிறார்.
ஸ்ரீதர் ரெட்டி இதுவரை 34 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறார். பள்ளிகளை புனரமைப்பு செய்வது, கழிப்பிடங்கள் கட்டிக்கொடுப்பது, பெஞ்சுகள், மின் விசிறிகள், மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், பேக்குகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக்கொடுப்பது என கல்வி சேவையில் முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறார்.
தன்னை போல் உதவும் உள்ளங்களை ஒருங்கிணைக்க முகநூலில் குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அந்த குழுவில் 23 ஆயிரம் பேர் இணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து சுகாதாரம், சமூக பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார்.