பனப்பாக்கம்,
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்த மாணவிகள் மனிஷா, தீபா, சங்கரி, ரேவதி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மாணவிகளின் தற்கொலை குறித்து விசாரணை நடத்துவதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமை ஆசிரியை ரமாமணி, வகுப்பு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி மற்றும் ஆசிரியைகள், சக மாணவிகள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தலைமை ஆசிரியை ரமாமணி, வகுப்பு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தொடர்ந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. காலை 8 மணி முதலே மாணவிகள் பள்ளிக்கு வர தொடங்கினர். பல மாணவிகளை அவர்களது பெற்றோரும், உறவினர்களும் வாகனங்களில் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச்சென்றனர். பள்ளி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சீருடை அணிந்த மாணவிகளை தவிர வேறு யாரையும் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை.
நேற்று பள்ளியில் தலைமைஆசிரியைக்கு பதிலாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா பள்ளிக்கு வந்தார். அவரது தலைமையில் இறைவணக்கம் நடந்தது. அப்போது அவர் உருக்கமாக பேசினார். அவர் கூறுகையில், 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மாணவிகளாகிய நீங்கள் தேவையற்ற எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எதையும் வெளிப்படையாக தெரிவியுங்கள். கோபத்தில் எடுக்கும் முடிவு சோகத்தில் முடியும். நமது உயிரை போக்கிக்கொள்ளும் உரிமை நமக்கு கிடையாது.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் என்னிடமும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடமும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். அதன்படி எனது செல்போன் எண்ணும், முதன்மை கல்வி அதிகாரி செல்போன் எண்ணும் வகுப்பு ஆசிரியைகளிடம் தரப்படும். அந்த எண்களை அவர்கள் உங்களுக்கு தெரிவிப்பார்கள். உங்கள் பிரச்சினைகளை ஆசிரியைகளிடமும் மனம்விட்டு பேசலாம். உங்களது நோக்கம் கல்வியில் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் அனைவரும் இறந்த 4 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் கண்ணீருடன் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து வகுப்புகள் தொடங்கியது. அதற்கு முன்னதாக அனைத்து வகுப்பு ஆசிரியைகளையும் தலைமைஆசிரியை அறைக்கு மாவட்ட கல்வி அலுவலர் அமுதா அழைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நீங்கள் எந்த மாணவியிடமும் கேள்வி கேட்க கூடாது. வழக்கம்போல் பாடத்தை மட்டுமே நடத்த வேண்டும்.
மாணவிகளிடம் அன்பாக பழக வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.