ஆலந்தூர்,
சென்னை கிண்டியில் இருந்து மேடவாக்கம் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக பிரபல நிறுவனத்தின் 50 பிரிட்ஜ்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தது.
மடிப்பாக்கம் கணேஷ்நகர் அருகே சென்றபோது, சாலையின் மேலே சென்ற மின்சார வயரில் கன்டெய்னர் உரசியது. இதில் கன்டெய்னர் தீப்பிடித்து எரிந்தது. கன்டெய்னரில் இருந்து புகை வருவதை கண்டதும் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் லாரியை சாலையோரம் நிறுத்தினர்.
இது பற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கன்டெய்னரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கன்டெய்னரில் இருந்த 20 பிரிட்ஜ்கள் எரிந்து நாசமாயின.
தீயில் சேதம் அடையாத மற்ற பிரிட்ஜ்களை பொதுமக்கள் உதவியுடன் கன்டெய்னரில் இருந்து கீழே இறக்கி சாலையோரம் வைத்தனர். இதற்கிடையில் கன்டெய்னர் லாரி டிரைவர், கிளீனர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அந்த கன்டெய்னர் லாரி மூலம் எங்கிருந்து பிரிட்ஜ்களை ஏற்றிக்கொண்டு எங்கு வினியோகம் செய்ய கொண்டு செல்ல இருந்தனர்? என்பது தெரியவில்லை.
இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.