மதுரை,
மதுரையில் ரூ.529 கோடி செலவில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வேலுமணி, உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, கலெக்டர் ராஜசேகர் ஆகியோர் நேற்று ஆய்வு நடத்தினர். பின்னர் அவர்கள் ரூ.40 கோடி செலவில் பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் நடந்து வரும் பல்லடுக்கு வாகன காப்பகத்தை நேரடியாக ஆய்வு செய்தனர். ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும் மாநகராட்சி கமிஷனர் விசாகன் விளக்கி கூறினார். அப்போது அமைச்சர்கள், ஸ்மார்ட் சிட்டி பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும். எந்த காலதாமதமும் செய்யக்கூடாது என்றனர்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள், அவ்வை மாநகராட்சி பெண்கள் பள்ளிக்கு சென்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் வேலுமணி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் பேசும்போது, மழைநீரை சேகரிப்பது மிக முக்கியம். உங்களது வீடுகள் மட்டுமின்றி உறவினர்கள் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களாகிய நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்என்றார்.
முன்னதாக அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தை கூட சிலர் தவறாக விமர்சிக்கிறார்கள். அவர் வெளிநாடு சென்று இருப்பது தமிழகத்தின் நலனுக்காக தான். நமது முதல்-அமைச்சர் மிகவும் எளிமையானவர். அவரை யாரும் எளிதாக சந்திக்க லாம். முதல்-அமைச்சராகி 3 ஆண்டுகளில் அவர் எந்த வெளிநாடும் செல்லவில்லை. ஜெயலலிதாவிற்கு பிறகு உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி ரூ.3 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தார்.
மாநகராட்சி பகுதிகளில் குளங்கள், கண்மாய்களை இணைக்கும் வரத்துக்கால்வாய்களை 70 ஆண்டுகளுக்கு மேலாக பலர் ஆக்கிரமித்து உள்ளனர். சென்னையில் இப்படி ஆக்கிரமித்து இருந்தவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து அப்புறப்படுத்தினோம். அதேபோல் மதுரையிலும் வரத்துக்கால்வாய்களை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வரத்துக்கால்வாய்கள் மீட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.