மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் முகாம்: குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்தவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்கள்.

தினத்தந்தி

சிவகங்கை,

சமீபத்தில் நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் பெரும் அளவில் நடந்த முறைகேடு அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குரூப்-4 தேர்வு நடைபெற்ற போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விடைத்தாள்களுடன் பல்வேறு வாகனங்கள் சென்னைக்கு புறப்பட்டுள்ளன. அப்படி புறப்பட்ட வாகனம் ஒன்று சிவகங்கைக்கு சென்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை அங்குள்ள கருவூலத்தில் வைத்திருந்தனர். அந்த விடைத்தாளையும் அதே வேனில் எடுத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டதாகவும், அப்போது இரவு நேரத்தில் சிவகங்கை அருகே மதகுபட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் வேனை நிறுத்திவிட்டு சாப்பிட்டதாகவும், அப்போது அந்த வேன் டிரைவர் உதவியுடன் விடைத்தாள்கள் முறைகேடு நடந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

எனவே சிவகங்கை மாவட்டத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் நேற்று அதிரடி விசாரணையை தொடங்கினர். நேற்று மதியம் சிவகங்கையில் கல்வி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

குரூப்-4 தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டனர், அதில் எத்தனை பேர் வெற்றி பெற்றனர், அவர்களின் ஊர் விவரம், எழுதிய தேர்வு மையங்களின் விவரம், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தனர்.

சாப்பிடுவதற்காக விடைத்தாளுடன் சென்ற வேன் நடுவழியில் நிறுத்தப்பட்ட சிவகங்-கை அருகே உள்ள மதகுபட்டி பகுதிக்கும் போலீசார் விரைந்தனர். அங்கு சம்பந்தப்பட்ட ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடந்தது. அந்த ஓட்டல் முன்பு விடைத்தாளுடன் சென்ற வேன் எவ்வளவு நேரம் நின்றது, அந்த வேனில் இருந்து இறங்கி வந்து சாப்பிட்டது எத்தனை பேர், அவர்களில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரும் இருந்தார்களா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி உள்ளனர்.

இது தவிர அந்த வேன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குறித்த விவரங்களை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கேட்டறிந்தனர். இந்த முறைகேட்டில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள் யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்றும், இந்த மோசடிக்கு உதவிய புரோக்கர்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

இந்த தேர்வில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியகண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜ் மாநிலத்தில் முதல் இடம் பிடித்தார். அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி போலீசார் 10 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் பல இடங்களில் விசாரணை மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் பெரியகண்ணூர் கிராமத்திலுள்ள

திருவராஜ் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவருடைய உறவினர்களிடம் திருவராஜ் பற்றிய தகவல்களை கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்றும், நாளையும் (செவ்வாய், புதன்கிழமை) சிவகங்கை மாவட்டத்தில் முகாமிட்டு, பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்