வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை என்றுதான் இந்தியாவின் எல்லையை குறிப்பிடுகிறோம். ஆனால், காஷ்மீர் ஓர் மாநிலம். குமரியோ ஓர் ஊர்.
தென்திசையின் தேச எல்லையாக விளங்கும் வகையில் சிறப்பான இட அமைப்பில் கன்னியாகுமரி அமைந்திருப்பதால் நாடு முழுவதும் அறியக்கூடியதாக குமரி விளங்குகிறது.
நாகர்கோவில் மாவட்ட தலைநகராக இருந்தாலும், கன்னியாகுமரியை அடையாளம் காட்டி, குமரி மாவட்டம் என்று அழைக்கிறார்கள். முக்கடலும் குமரி முனையில் சங்கமிக்கின்றன. எனவே கடலோர பகுதிகள் மாவட்டத்தின் மூன்று திசைகளிலும் உண்டு.
மூன்று புறமும் கடலாலும், ஒரு புறம் நிலத்தாலும் சூழப்பட்டதை தீபகற்பம் என்று அழைப்பதை போல, குமரி மாவட்டத்தையும் அவ்வாறு அழைக்க முடியும்.
எனவே கடலோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது குமரி மாவட்டம். மீனவ மக்கள் கணிசமான அளவில் இந்த மாவட்டத்தில் வசிக்கிறார்கள்.
இயற்கையாக குமரி மாவட்டத்துக்கு நில அமைப்பு ரீதியில் பல்வேறு சிறப்புகள் உண்டு. அதே நேரம் இயற்கை சீற்றம் என்று ஏற்பட்டால் தானாகவே பல பாதிப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன. குறிப்பாக கடல் சார்ந்த இயற்கை சீற்றம் என்றால், குமரி மாவட்டம் நிச்சயம் பாதிக்கப்படக் கூடியதாகி விடுகிறது. சமீப காலத்தில் குமரியை இரண்டு இயற்கை சீற்றங்கள் புரட்டி போட்டன.
அதில் ஒன்று, 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை. மற்றொன்று கடந்த நவம்பர் 30-ந் தேதி அதிகாலையில் வீசிய ஆழிக்காற்று.
காற்றழுத்த தாழ்வு நிலையாக கடல் பகுதியில் உருவாகி, புயலாக மாறிய அந்த ஆழிக்காற்று குமரியை நெருங்கி வந்து கடல் வழியாகவே சென்றதால் ஏற்பட்ட பேரழிவு கொஞ்சநஞ்சம் அல்ல!
ஒகி என்று அந்த புயலுக்கு பெயரிட்டார்கள். புயல் ஓய்ந்தாலும், ஒகி என்ற வார்த்தைக்கு குமரி மாவட்டத்தில் சிறுவர்களை கேட்டாலும், அது ஒரு புயல் என்று விளக்கம் சொல்லும் அளவுக்கு மாறாத ஒரு தழும்பாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
அந்த புயலில் சிக்கி கடலிலேயே மாண்டு சடலமாக மீனவர்கள் பலர் கரை ஒதுங்கினார்கள். மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் கதி என்ன? என்பதற்கு அரசால் இன்னமும் விடை கூற முடியவில்லை. பார்த்து பார்த்து வளர்த்த பயிர்கள், மரங்கள் சில மணி நேர புயலில் சாய்ந்து, பட்டமரங்களாகி விட்டதால் ஏராளமான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். பலர் வீடுகளை இழந்து நிற்கிறார்கள்.
இவ்வாறு பல துயரங்களை கொடுத்த புயல் ஓய்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாகிறது. ஆனால், குமரி மாவட்டம் முழுமையாக மீண்டு வந்திருக்கிறதா? மீனவ கிராமங்களில் இயல்பு நிலை திரும்பி இருக்கிறதா? என்பதற்கான விடையை இனி காணலாம்.
ஒகி புயலால் கேரளாவும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தாலும், குமரி மாவட்டம்தான் அதிக சேதத்தை சந்தித்து இருக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை மீனவ மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஆனால், இந்த ஆண்டில் அந்த கொண்டாட்டங்கள் களை இழந்து போனதற்கு ஒகிதான் ஒற்றைக் காரணம்.
கணவனை இழந்த பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், சகோதரனை இழந்தவர்கள் என மீனவ கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பெரும் தவிப்பில் உள்ளன.
அறியாப் பருவத்தில் உள்ள குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் தங்களுடைய தந்தை எப்போது வருவார்? என்று தேடி தவிப்பது இன்னும் பரிதாபம். குமரி மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று பல நாட்கள் தங்கி இருந்து மீன்பிடிப்பார்கள். பின்னர் கரை திரும்பி குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் மீன்பிடிக்க புறப்படுவார்கள். எனவே வழக்கமாக மீன்பிடிக்கச் செல்வது போல்தான் தந்தை மீன்பிடிக்கச் சென்று இருக்கிறார், சீக்கிரம் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில்தான் நிறைய குழந்தைகள் எதிர்பார்த்து தவிக்கின்றன. ஆனால், புயலின் கோரப் பிடியில் அந்த மீனவர்கள் சிக்கிவிட்டார்கள், அவர்கள் கதி என்ன? என்பதை அறிய முடியவில்லை என்று அந்த குழந்தைகளிடம் விளக்கி கூறி யார் புரிய வைப்பது?
தந்தை எப்போது வருவார் என்று தாயிடம் கேட்டு அடம் பிடித்து அழும் குழந்தையை தேற்றுவதற்கு, அந்த தாயும் அழுகையையே பதிலாக தெரிவிக்க வேண்டிய சோகம்தான் அங்கு நிலவுகிறது.
ஒகி புயல் நிலப்பரப்பில் ஆடிய கோரத்தாண்டவத்தை விட, கடலுக்குள் ஆடிய ருத்ரதாண்டவம் மிகவும் கொடூரமாக இருந்தது என்று அதில் சிக்கி, மீண்டு கரை சேர்ந்த மீனவர்கள் கூறுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் தூத்தூர், நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, பூத்துறை, இரையுமன்துறை, தேங்காப்பட்டினம், குளச்சல், மணக்குடி என்று பல கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒகி புயலில் சிக்கி மாயமாகி உள்ளார்கள். அதில், சின்னத்துறை மீனவ கிராமத்தில் மாயமான மீனவர்களின் புகைப்படங்கள் பேனராக வைக்கப்பட்டு, அதில் ஒகி புயலில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இதேபோல் வள்ளவிளை கிராமத்திலும் மாயமான மீனவர்களின் புகைப்படங்கள் பேனராக வைக்கப்பட்டுள்ளன. அதில் கரை திரும்பவேண்டிய வள்ளவிளை மீனவர்கள் 33 பேர், நம் படகில் சென்று கரைதிரும்ப வேண்டிய வெளியூர் மீனவர்கள் 37 பேர் என்று 70 பேர் பெயர் விவரம் இடம்பெற்றுள்ளது. அதில், 65 பேரின் புகைப்படங்களும் உள்ளன.
அந்த பேனரில் இன்னொரு வாசகமும் இடம்பெற்றுள்ளது.
மீட்க தவறிவிட்டார்களா?
இல்லை-
மீட்பதையே தவிர்த்து விட்டார்களா?
நிவாரணத்துக்காக அல்ல,
நீதிக்கான குரல் எழுப்பி காத்திருக்கிறோம்,
நீங்கள்-
மீண்டு வருவீர்கள் என்று
என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மாயமான மீனவர்களுடன் மீன்பிடி தொழிலுக்காகவும், சமையல் வேலைக்காகவும் உடன் சென்றிருந்த பல வெளிமாநில தொழிலாளர்களும் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத்தேடி வடமாநிலங்களில் இருந்து அவர்களது சொந்தபந்தங்கள் பலர் தூத்தூர் மற்றும் வள்ளவிளை கிராமங்களுக்கு வந்து சென்றுள்ளனர்.
இப்படி சோகம் இழையோடிக் கொண்டிருக்கும் குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் இன்னமும் சரியான நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்பது பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.
நிர்க்கதியான குடும்பம்
சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த மெல்க்கியாஸ் (60) என்பவரின் குடும்பமும் சோகத்தில் தவிக்கிறது. அவருடைய மகன் ஜூடி, மகள் ஜூல்சியின் கணவர் ராபின் ஆகிய 2 பேரும் ஒகி புயலில் சிக்கி மாயமாகிவிட்டார்கள்.
மெல்க்கியாஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அதனால் அவரால் கடல் தொழிலுக்கு செல்ல முடியவில்லை. எனவே மகன் ஜூடியும், மருமகன் ராபினும் தங்களது மீன்பிடி தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் மெல்கியாசுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். எனவே இந்த குடும்பமும் உழைக்கும் ஆண் நபர் இன்றி தவித்து வருகிறது.