மதுரை,
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நேற்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளது.
சிங்கப்பூருக்கு மீண்டும் விமான சேவை
கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய அரசு சர்வதேச விமான சேவைக்கு தடை செய்திருந்தது. இந்தநிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து மீண்டும் சர்வதேச அளவில் விமான சேவைக்கு மத்திய அரசு கடந்த 27-ந் தேதி அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமான சேவை வழக்கபோல் இயங்க தொடங்கி உள்ளது.
இதேபோல இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று முதல் மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையைத் தொடங்கி உள்ளது. அதன்படி சிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை 6.40 மணிக்கு மதுரை வந்த விமானத்தில் 74 பயணிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு விமான நிறுவனமும், விமான நிலைய ஊழியர்களும் வரவேற்பளித்தனர்.
76 பயணிகள் சென்றனர்
மீண்டும் அந்த விமானம் மதுரையில் இருந்து இரவு 9.35 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டுச்சென்றது. அதில் 76 பயணிகள் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச்சென்றனர். இந்த விமானமானது வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை இயக்கப்படுகிறது என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.