மாவட்ட செய்திகள்

கர்நாடகத்துக்கு சரக்கு-சேவை வரி இழப்பை ஈடுகட்ட மேலும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வேண்டும் 15-வது நிதி ஆணைய கூட்டத்தில் குமாரசாமி கோரிக்கை

பெங்களூருவில் நடந்த 15-வது நிதி ஆணைய கூட்டத்தில், சரக்கு-சேவைவரி இழப்பை ஈடுகட்ட மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்தார்.

பெங்களூரு,

15-வது நிதி ஆணைய அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

வரி வசூலில் கர்நாடகம் சிறந்து விளங்குகிறது. சரக்கு -சேவை வரி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டபோது, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதாக மத்திய அரசு உறுதியளித்தது.

அதன்படி இழப்பீடு வழங்குவதை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். பல்வேறு நலத்திட்டங்களுக்கு வழங்கும் நிதி உதவியை மத்திய அரசு குறைத்துவிட்டது. அதே போல் மத்திய அரசால் அமல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியும் குறைக்கப்பட்டுவிட்டது. இது சரியல்ல. தேசிய இயற்கை பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பலமுறை மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளின் நலத்திட்ட பணிகளுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். கர்நாடக அரசு ரூ.43 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு விவசாயிகளின் மேம்பாட்டிற்கு இன்னும் அதிகமான திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

கர்நாடக அரசு தனது நிதி நிலையை சரியான முறையில் பராமரித்து வருகிறது. நிதி பற்றாக்குறை, மத்திய அரசின் சட்ட வழிமுறைக்குள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மோட்டார் வாகன வரி, முத்திரைத்தாள் வரி, கலால் வரி ஆகியவை சரியான முறையில் வசூலிக்கப்பட்டு வருகிறது. எங்கள் அரசு, இஸ்ரேலை போல் சிறிய நீர்ப்பாசன முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறுதானியங்கள் விளைச்சலை ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு ஆதரவு வழங்குகிறோம். இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கப்படுகிறது. இதுவரை ரூ.1.11 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1,500 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. நிலத்தடி நீரை பாதுகாப்பது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். தனிநபர் வருமானம், நிதி பற்றாக்குறை ஆகியவற்றின் அடிப்படையில் கர்நாடகத்திற்கு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல், தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை