மாவட்ட செய்திகள்

உச்சிப்புளி அருகே 2015-ம் ஆண்டு கைதான விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் 4 பேர் கோர்ட்டில் ஆஜர்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே 2015-ம் ஆண்டு கைதான விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் 4 பேர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு தப்ப முயன்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த திருச்சி கே.கே.நகரில் வெளிப்பதிவு அகதியாக தங்கிஇருந்த இலங்கை யாழ்ப்பாணம் கந்தசாமி மகன் கிருஷ்ணகுமார் என்ற சாந்தன்(வயது 39), அவருடைய நண்பர் உச்சிப்புளியை சேர்ந்த நடராஜன் மகன் ராஜேந்திரன்(44), உச்சிப்புளி நாகாச்சியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் டிரைவர் சசிக்குமார்(40) ஆகியோர் காருடன் பிடிபட்டனர்.

இவர்களிடம் இருந்து 4 ஜி.பி.எஸ். கருவிகள், இந்திய பணம் ரூ.46,124, இலங்கை பணம் ரூ.19,300 மற்றும் 75 சயனைடு குப்பிகள், 600 கிராம் சயனைடு விஷம், ஓட்டுனர் உரிமங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. கடந்த 1990-ம் ஆண்டில் சாந்தன் விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரனுடன் மிகவும் நெருக்கமாக இருந்து பல முக்கிய சம்பவங்களை முன்னின்று வெற்றிகரமாக நடத்தியவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தமிழர்களின் விடுதலைக்காக தொடங்க திட்டமிட்டுஉள்ளதாகவும் இதற்காக இலங்கையில் தனியாக ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் தயாராகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடங்க உள்ளதாக பிடிபட்டவர்கள் கூறியதாக வெளியான தகவல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவாளரான இலங்கை கிளிநொச்சி ரத்தினம் மகன் சுபாஷ்கரன்(35) என்பவரை அடுத்த சில நாட்களில் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அகதியாக வந்து சென்னையில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சுபாஷ்கரன் வெளிநாடுவாழ் இலங்கை தமிழர்களிடம் இருந்து வரும் பணத்தை இந்திய பணமாக மாற்றிக்கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். மதுரையில் வெளிப்பதிவு முகாமில் தங்கியிருந்த அகதி ஒருவரிடம் சாந்தன் இலங்கை செல்ல தேவையான பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சுபாஷ்கரன் மூலம் சாந்தனுக்கு பண உதவி கிடைத்துள்ளது. இந்த பணத்தின் மூலம் சயனைடு குப்பிகள், ஜி.பி.எஸ்.கருவிகள் போன்றவற்றை அவர் வாங்கி உள்ளார்.

இதனை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். கோர்ட்டு உத்தரவின்படி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் 4 பேரும் வழக்கு விசாரணைக்காக நேற்று ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கயல்விழி இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதன்பின்னர் 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த வழக்கில் மேற்கண்ட 4 பேரும் அளித்த தகவலின் அடிப்படையில் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த குமரன் முருகன் என்ற உதயகுமாரை போலீசார் களியக்காவிளை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதும், அவர் மீதான வழக்கு தனியாக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்