கொடைக்கானல்,
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வரை குளிர்கால சீசன் நிலவுவது வழக்கம். அதன்படி இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொடைக்கானலில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று கடும் குளிர் வாட்டி எடுத்தது. இதனால் கொடைக்கானலில் அதிகாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கொடைக்கானல் ஏரிச்சாலையிலுள்ள ஜிம்கானா பகுதி, செல்லபுரம், அப்சர்வேட்டரி, பேரிபால்ஸ் ரோடு, கீழ்பூமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புற்செடிகளின் மீது வெண்ணிற போர்வையை போர்த்தியதைபோல் உறைபனி படர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த உறைபனியை சிலர் கையில் எடுத்து பார்த்தனர்.
அதிகாலையில் குளிர் அதிகமாக இருந்ததால் ஏரிச்சாலையில் நடைபயிற்சி செல்ல முடியாமல் பலர் வீடு திரும்பினர். நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. கொடைக்கானல் நகர் மற்றும் பல்வேறு இடங்களில் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் உறைந்தது. இந்த உறைபனியால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர். நேற்று காலை 8.30 மணிக்கு சூரியன் தெரிந்ததால் வெப்பம் நிலவியது. குளிரின் தாக்கம் குறைந்தது. அதன் பின்னர் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்தது.