ஈரோடு,
மஞ்சள் மாநகரமாக திகழும் ஈரோட்டில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலமாக மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. இந்த மஞ்சள் மார்க்கெட்டுகளில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த மஞ்சளை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். மஞ்சளின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்களுக்கு தேவையான மஞ்சளை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.
ஈரோட்டில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மஞ்சளின் விலை உயராமல் இருந்தது. இதனால் விவசாயிகள் தங்களது மஞ்சளை விற்பனை செய்யாமல் இருப்பு வைத்தனர். மேலும், கொரோனா பாதிப்பு காலத்தில் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படும் மஞ்சளின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்தநிலையில் ஏலத்துக்கு புதிய மஞ்சள் வரத்து குறைவாக இருப்பதால், மஞ்சளின் விலை சற்று உயர தொடங்கி உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:- இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் விளைவிக்கப் படுகிறது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மார்க்கெட்டிற்கு ஏற்கனவே புதுமஞ்சள் வரத்து தொடங்கிவிட்டது. ஈரோடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக டிசம்பர் மாத இறுதி வாரம் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் கர்நாடக மாநிலம் மற்றும் பவானி, அந்தியூர் பகுதிகளில் இருந்து புதுமஞ்சள் வரத்து இருக்கும். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தை மாதம் வரை நீடித்ததன் விளைவாக அறுவடை தாமதமாகி உள்ளது.
புது மஞ்சள் வரத்து இல்லாததால் ஒரு குவிண்டாலுக்கு தரமான மஞ்சள் ரூ.500 முதல் ரூ.700 வரையும், பழைய மஞ்சள் ரூ.700 முதல் ரூ.1, 000 வரையும் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விரலி மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 500 முதல் ரூ.6 ஆயிரத்து 900 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 400 வரையும் விற்பனை ஆகிறது.
ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு ஒரு வார காலத்தில் புது மஞ்சள் வரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது. தேசிய அளவில் அதிக அளவு மஞ்சள் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா மாநிலம் பஸ்மத், நாந்தேட் உள்ளிட்ட மராத்வாடா மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு மார்ச் மாதத்தில் இருந்து அதிகமாக மஞ்சள் வர ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்திய காலத்தில் உள்நாட்டு நுகர்வு குறைந்து இருந்தாலும், ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. நடப்பு மஞ்சள் விளைச்சல் மற்றும் அடுத்த ஆண்டு மஞ்சள் சாகுபடி பரப்புகளை பொறுத்து மஞ்சள் விலை நிலவரம் இருக்கும் என்று அவர் கூறினார்.