தேவதானப்பட்டி,
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 40). கூலித்தொழிலாளி. நேற்று காலை இவர், ஆண்டிப்பட்டிக்கு வேலைக்கு செல்வதற்காக பெரியகுளம்-ஆண்டிப்பட்டி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ்சின் படிக்கட்டு அருகே அவர் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.ஜெயமங்கலம் அருகே கோவில்புரம் ஓடையில் உள்ள வளைவில் பஸ் திரும்பியது. அப்போது, எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்து அய்யம்மாள் திடீரென கீழே தவறி விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், அய்யம்மாளின் உறவினர்களும் அங்கு திரண்டனர். அய்யம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்வதற்கு தேனி க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் சாலையோரத்தில் அய்யம்மாளின் உடல் அப்படியே கிடந்தது. இதனை கண்டு ஆத்திரம் அடைந்த அய்யம்மாளின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் தனியார் ஆம்புலன்சில் அய்யம்மாளின் உடலை ஏற்றி, பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.