ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நூர்சாகிபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அப்போது 154 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முகாமில் கலெக்டர் பேசுகையில் கூறியதாவது:-
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலே அந்தந்த கிராமங்களின் அருகில் உள்ள பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து விரைவாகவும் நேர்மையாகவும் சான்றிதழ்கள் பெறலாம். என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்தும் இ-சேவை மையங்களில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் எதற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது, யாரை நோக்கி செயல்படுத்தப்படுகிறது என்பனவற்றை நன்கு தெரிந்துகொண்டு, அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு நாம் தகுதியானவர்களாக இருக்கும் பட்சத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தங்களை பற்றியும் தேவைகள் குறித்தும் தெளிவாகவும் உண்மையாகவும் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தேவைப்படுவதை செய்து தரமுடியும்.
உதாரணமாக முதியோர் உதவித்தொகை வேண்டும் என்றால் பிள்ளைகள் இருக்கிறதா இல்லையா, இருந்தும் உதவ முடியவில்லையா அவர்களுக்கு வருமானம் இல்லையா அல்லது தரமறுக்கிறார்களா என்பன போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்றால் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு என்று சட்டங்கள் உள்ளது. எனவே தேவைகள் என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு அரசு வழங்கும் சலுகைகளை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு கூறினார்.
முகாமில், ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், கோட்டாட்சியர் தினகரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஜெகதீசன், தாசில்தார் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் உள்பட அனைத்து அலுவலர்களும் முகாமிற்கு அரசு பஸ்சில் சென்றனர்.