கோவை,
இலங்கையை சேர்ந்த ரவுடி அங்கட லக்கா (வயது 36). இவர் கடந்த 2017-ம் ஆண்டு 7 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தலைமறைவான அவரை தேடப்படும் குற்றவாளியாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில் கோவை சேரன்மாநகர் பகுதியில் பிரதீப் சிங் என்ற பெயரில் பதுங்கி இருந்த அங்கட லக்கா மாரடைப்பால் இறந்ததாக கூறி அவரது உடல் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த அங்கடலக்காவின் காதலி அமானி தான்ஜி, மதுரையை சேர்ந்த சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் அமானி தான்ஜி 2 கர்ப்பமாக இருந்ததாகவும், கரு கலைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அங்கட லக்காவின் காதலி அமானி தான்ஜி வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும், பாதுகாப்பு காரணத்தாலும் கோவை மத்திய சிறையில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் சென்னையில் உள்ள புழல் சிறைக்கு நேற்று முன்தினம் திடீரென மாற்றப்பட்டார். அவர் கோவையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் வெளிநாட்டினர்களுக்கு என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அங்கட லக்கா தான் சினிமாவில் நடிக்கப்போவதாக கூறி தனது மூக்கை மாற்றி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும்போது, அங்கட லக்காவுக்கு தமிழகம் மட்டுமின்றி மேற்கு வங்க மாநிலத்தில் சிலருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். கைதான மதுரையை சேர்ந்த சிவகாமி சுந்தரியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி வரவு வைக்கப்பட்டது எப்படி? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.