சிவகங்கை,
சிவகங்கை அருகே கீழப்பூங்குடியை சேர்ந்தவர் கண்ணாத்தாள். இவர் சென்னையில் வசித்து வருகிறார். இதனால் கீழப்பூங்குடியில் உள்ள அவரது வீடு பூட்டி கிடந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கண்ணாத்தாள் வீட்டினுள் நுழைந்த மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள், நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டனர். இதனையடுத்து கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை கைதுசெய்யும் பொருட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையில் சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், பாண்டியன், வெங்கடேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
கொள்ளை சம்பவத்தில் தமிழ்ச்செல்வம் என்பவரது தலைமையிலான ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. கொள்ளை நடந்த வீட்டின் உரிமையாளர் பல மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். கொள்ளை நடந்த கண்ணாத்தாள் வீட்டின் அருகே தமிழ்ச்செல்வத்தின் உறவினர் விக்னேஷ்குமார் வீடு உள்ளது. இது கொள்ளையர்களுக்கு வசதியாக இருந்துள்ளது. எனவே தமிழ்ச்செல்வம் தனது கூட்டாளிகளுடன் இங்கு தங்கி பல தடவையாக கொஞ்சம், கொஞ்சமாக கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிந்தது.
இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி தமிழ்ச்செல்வம், அவரது கூட்டாளிகள் சார்லஸ், பெர்க்மான்ஸ், விஸ்வநாதன், ஜெகன், முத்துசெல்வம், வெங்கட், விக்னேஷ்குமார் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் வழக்கில் தொடர்புடைய கொல்லங்குடியை அடுத்த அழகாபுரியை சேர்ந்த விஸ்வநாதன், தேவகோட்டையை சேர்ந்த பெர்க்மான்ஸ் மற்றும் கீழப்பூங்குடியை சேர்ந்த விக்னேஷ்குமார், மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கத்தபட்டுவை சேர்ந்த முத்துசெல்வம், தமிழ்ச்செல்வம், சார்லஸ் ஆகிய 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். அவரிகளிடம் இருந்து அரை கிலோ தங்கக்கட்டிகள், 30 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளி ஆகியவை மீட்கப்பட்டன.
இதில் விக்னேஷ்குமார் திரைப்பட உதவி இயக்குனராக இருக்கிறார். பல குறும்படங்களையும் அவர் இயக்கியுள்ளார். அவருடைய அக்காளை தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தமிழ்ச்செல்வம் திருமணம் செய்துள்ளார். இதேபோல் முத்துசெல்வம், கத்தபட்டில் இரும்பு கடை வைத்துள்ளார். பெர்க்மான்ஸ் ஓட்டல் நடத்தி வருகிறார்.
மேலும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெகன், வெங்கட் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.