குளச்சல்,
மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபுநாதன். இவர் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரும், நாகர்கோவில் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் ரொனால்டு ரீகனும் போலீஸ் ஜீப்பில் குளச்சலில் இருந்து திக்கணங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஜீப்பை ரொனால்டு ரீகன் ஓட்டி சென்றார்.
திக்கணங்கோடு அருகே வெள்ளியாகுளம் பகுதியில் சென்றபோது, எதிரே ஒரு அரசு பஸ் வந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், போலீஸ் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
படுகாயம்
இதில் ஜீப்பில் இருந்த 2 போலீஸ்காரர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். பிரபுநாதன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், ரொனால்டு ரீகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.