பொன்னேரி,
பொன்னேரி வருவாய் கோட்டத்தில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் முன்னிலை வகித்தார். தாசில்தார்கள் புகழேந்தி, சுரேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் புகார் மனுக்களை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முகாமில் பயனாளிகளுக்கு சாதிசான்று, ரேஷன்கார்டு, நலத்திட்ட உதவி, டிராக்டர்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் 55 பேர் பயன்பெற்றனர்.
முகாமில் கலந்து கொண்டு பேசிய கலெக்டர் கூறியதாவது:-
ஒவ்வொரு மாதமும் வருவாய் கோட்டங்களில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மனு கொடுப்பதற்காக நீண்ட நேரம் பயணம் செய்து கலெக்டர் அலுவலத்திற்கு வருவது தவிர்க்கப்படுகிறது.
நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் ஆண்டி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம், ஒன்றிய ஆணையாளர் கவுரி, துணை தாசில்தார்கள் அருள்வளவன், செல்வகுமார், வட்டவழங்கல் அலுவலர் காயத்ரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதாதேவி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.