மாவட்ட செய்திகள்

அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

அரசின் திட்டங்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எட்டிவயல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

தினத்தந்தி

போகலூர்,

போகலூர் யூனியனுக்கு உட்பட்ட எட்டிவயல் கிராமத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:- ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில் 1994-ல் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி கிராம ஊராட்சி நிர்வாகத்தில் வருடத்தில் 4 கிராம சபை கூட்டம் நடத்த வரையறை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்டத்தில் 429 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் அரசால் தெரிவிக்கப்பட்ட 22 பொருள்கள் குறித்தும், கிராம சபை அங்கத்தினர்கள் மற்றும் ஊராட்சியில் தனி அலுவலரால் முன் வைக்கப்படும் முக்கியமான இதர விசயங்கள் குறித்தும் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மத்திய அரசு தேசிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய நிலையில் உள்ள கிராம ஊராட்சிகளை தேர்வு செய்து அந்த கிராமங்களில் கிராம சுவராஜ் அபியான் எனும் கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் 34 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்கள் அனைத்தையும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக உருவாக்கிடும் வகையில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழைகளுக்கான இலவச எரிவாயு திட்டம், அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம், விபத்து காப்பீடு மற்றும் உயிர் காப்பீடு திட்டங்கள், மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி போடும் திட்டம், எல்.இ.டி. பல்புகள் வழங்கும் திட்டம் உள்பட 7 வகையான திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவற்றில் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் மூலம் ஏதேனும் காரணத்தால் மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இதற்காக வருடத்திற்கு ரூ.330 கட்டணமாக செலுத்தினால் போதுமானது. இதற்கு 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர் அனைவருமே தகுதியுடையவர்களாக கருதப்படுவர். மேலும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஏதேனும் விபத்தால் மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால் ஆயுள் காப்பீடு ரூ.2 லட்சம் வரை பெறலாம்.

இதற்கு ஆண்டு பிரிமியமாக ரூ.12 மட்டும் செலுத்தினால் போதும். இதுதவிர பொதுமக்கள் வங்கிக்கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பிரதம மந்திரி ஜந்தன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் எவ்வித முன்பணம் செலுத்தாமல் கணக்கு தொடங்கலாம். மேலும் நமது மாவட்டத்தில் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரூ.252 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, பரமக்குடி தாசில்தார் பரமசிவம், போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மேனகா, முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ்பாபு உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்