காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த மலையின் அடிவாரத்தில் பரவலாக சந்தன மரங்கள் உள்ளன. அதேபோல் மலை அடிவாரத்தில் இருந்து சாவடி பாளையம் செல்லும் சாலையிலும் ஏராளமான சந்தன மரங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்றுகாலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சாவடிபாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த சந்தன மரம் ஒன்று வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் அருகே சந்தன மரத்தின் ஒரு சிறிய கிளை மட்டுமே கிடந்தது. மற்ற அனைத்து கிளைகளையும் மர்ம ஆசாமிகள் கடத்தி சென்று விட்டனர். சம்பவத்தன்று இரவு அந்த பகுதிக்கு வாகனத்துடன் சென்ற ஆசாமிகள், அதிநவீன கருவிகளை பயன்படுத்தி, சந்தன மரத்தின் அடிப்பகுதியில் அறுத்து, அதை அப்படியே எடுத்து வாகனம் மூலம் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறியதாவது:-
சிவன்மலை அடிவார பகுதியில் பரவலாக சந்தன மரங்கள் உள்ளன. இந்த மரங்களை வெட்டி கடத்துவதற்கு என்றே ஒரு கும்பல் உள்ளது. கடந்த ஆண்டு சிவன்மலை அடிவாரத்தில் நந்தவனப்பகுதியில் இருந்த சந்தனமரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்தி சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிறிய சந்தன மரங்களை திராவகம் ஊற்றி அழித்து விட்டனர். தற்போது மீண்டும் சந்தன மர கடத்தல் கும்பல் சிவன்மலை பகுதியில் ஊடுருவி உள்ளது. எனவே இனி இருக்கிற சந்தன மரங்களையாவது அதிகாரிகள் பாதுகாக்க முன்வரவேண்டும். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மர்ம கும்பல் சிவன்மலை அடிவாரத்தில் உள்ள மற்ற சந்தன மரங்களையும் வெட்டி கடத்தி சென்று விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.