விராலிமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர் நேற்று விராலிமலை கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த காடபிள்ளையார்பட்டி, தென்னத்திரையன்பட்டி, லெட்சுமணன்பட்டி,
பாலண்டாம்பட்டி, களமாவூர், நடுப்பட்டி, தொண்டைமான்நல்லூர், நீர்பழனி, சித்தாம்பூர், மலம்பட்டி உள்பட 46 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.அப்போது, விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவரது மகள் அனன்யா வாக்குசேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:-
எனது தந்தை இரவும், பகலும் உங்களுக்காக உழைக்கிறாங்க. எப்பவும் உங்களுக்காக தான் உழைப்பார். உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர் துடித்துப் போய் விடுவார். காது கேட்காதவர்களுக்கு காது மிஷினா வருவாரு. கண்ணு தெரியலனா கண்ணாடியா வருவாரு. கொரோனா என்றால் மருந்தாக வருவாரு. பொங்கலுக்கு சீராக சிறப்பாக வருவாரு. நீங்க ஒரு வாய்ப்பு தந்தீர்கள் காவிரி நீர் தந்தாரு இன்னொரு வாய்ப்பு தந்தீங்கனா காவிரி ஆற்றையே தருவாரு. தீபாவளி, பொங்கல்னா கூட எங்ககூட இருக்கிறது இல்லை. உங்களோடு தான் இருப்பாரு. தீபாவளி அப்பகூட உயிருக்கு
போராடிக்கொண்டிருந்த சுஜித் தம்பியை காப்பாற்ற போனாரு. ஏன் நானே சொன்னேன். நீங்க வீட்டுக்கு எல்லாம் வர வேண்டாம்பா சுஜித் தம்பியை காப்பாற்றிவிட்டு வரணும்னு சொன்னேன். அந்த அளவிற்கு எங்க அப்பா உங்களுக்காகவே உழைச்சிக்கிட்டு இருக்காரு. அவர் உங்க வீட்டு பிள்ளை. நீங்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது பாலாண்டாம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பவுனம்மாள் எம்.ஆர்.ரவி, மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அமைச்சர் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அப்போது விராலிமலை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் திருமூர்த்தி (கிழக்கு),
ஏவி.ராஜேந்திரன் (வடக்கு) மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.