மாவட்ட செய்திகள்

கனமழை: ஏரிக்கரை உடைந்ததில் 200 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

நல்லம்பள்ளி அருகே கனமழையால் ஏரியின் கரை உடைந்து 200 ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ளது வெள்ளாச்சாரிகுட்டைஏரி. சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை சுற்றி உள்ள கரையை மேம்பாடு செய்யவும், மதகுகள் அமைக்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக இரு மதகுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால், முதல் மதகு அமைந்துள்ள பகுதியில் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த மழைநீர் வெளியேறி தம்மணம்பட்டி, பாளையாத்தனூர், ஆவரங்காட்டூர் ஆகியபகுதிகளில் உள்ள சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் இந்த விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், பருத்தி, மஞ்சள், சோளம், கரும்பு உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உதவி கலெக்டர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, வருவாய் ஆய்வாளர் முல்லைக்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளையும், விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த நிலங்களையும் நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட ஏரிக்கரையை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் அங்கு கூடியிருந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பொக்லைன் எந்திரம் முன்புஅமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது-

இந்த ஏரிக்கரையை மேம்பாடு செய்யவும் இந்த ஏரியில் இருந்து விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் மதகுகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் பணியை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர்கள் உறுதியளித்தனர். இதை ஏற்று விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் கலெக்டர் விவேகானந்தன், உடைப்பு ஏற்பட்ட ஏரியில் தேவையான சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மண் மற்றும் மணல் மூட்டைகளை நிரப்பி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செயற்பொறியாளர் வரதராஜ் பெருமாள், உதவி செயற்பொறியாளர் அசோக்குமார், பொறியாளர்கள் தமிழ்மணி, சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சீரமைப்பு பணியை நேரில் பார்வையிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி