மாவட்ட செய்திகள்

பாசன வாய்க்காலை தூர்வாரவில்லையென்றால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்

கீழவல்லம் பாசன வாய்க்காலை தூர்வாரவில்லையென்றால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தினத்தந்தி

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில் இருந்து புத்தூர் மதகடி என்ற இடத்தில் கீழவல்லம் பாசன கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் புத்தூர், ஆயங்குடிபள்ளம், கீழவல்லம், தைக்கால், கன்னாங்குளம், தில்லைமங்கலம் ஆகிய கிராமங்களின் வழியாக சென்று குட்டியாவெளி கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்காலில் கலக்கிறது. கீழவல்லம் பாசன வாய்க்கால் மூலம் மேற்கண்ட கிராமங்களில் உள்ள 1500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி மற்றும் வடிகால் வசதி பெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த வாய்க்கால்களில் உரிய தண்ணீர் திறந்து விடாததால், கீழவல்லம் வாய்க்காலுக்கும் தண்ணீர் வரத்து நின்றுபோனது. மேலும் வாய்க்காலை தூர்வாராததால், புத்தூர் மதகடியில் இருந்து 100 மீட்டர் வரை மட்டுமே வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. மீதமுள்ள 2 கி.மீட்டர் தூரத்திற்கு தூர்ந்துபோய் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுமண்ணியாறு மற்றும் கீழவல்லம் வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இருந்தும், கீழவல்லம் வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி சம்பா நெற்பயிர் சாகுபடி செய்ய தண்ணீரின்றி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே நிலத்தடிநீரை பயன்படுத்தி 500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். மீதமுள்ள 1000 ஏக்கரில் விவசாயிகள் மின்மோட்டார் மற்றும் டீசல் என்ஜின் ஏதுமின்றி சம்பா பயிர் சாகுபடி செய்யாமல் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

கீழவல்லம் வாய்க்கால் 4 கி.மீட்டர் தூரம் உள்ளது. இந்த வாய்க்கால் புத்தூரில் இருந்து பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், வாய்க்கால் தூர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி அவதிப்படுகிறோம். வாய்க்காலை தூர்வார கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக கீழவல்லம் பாசன வாய்க்காலை தூர்வாரவில்லை என்றால், சீர்காழியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்